ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்கே ராகுல் காந்தி அஞ்சினார்: சமாஜ்வாடி எம்பி கருத்தால் சலசலப்பு

சமாஜ்வாடி கட்சி எம்.பி.யின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி
Published on: 

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் சமாஜ்வாடி கட்சி எம்.பி. கடுமையாக விமர்சித்திருப்பது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் தயக்கம்

சமாஜ்வாடி கட்சியின் பிரதாப்கர் தொகுதி எம்.பி. சிவ்பால் சிங் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைக்காவிட்டால், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் போட்டியிட பயந்தார். இதனால்தான் அமேதிக்கு பதிலாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார்.ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடவே தயக்கம் காட்டினார்.

அப்போது, எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ்தான் அவரை சமாதானப்படுத்தி தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினார். அவர் போட்டியிடாவிட்டால், அந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம் என்றும் தெரிவித்தார். இதன்பிறகுதான் ராகுல் காந்தி போட்டியிட சம்மதித்தார்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி முழு ஆதரவு அளித்தது. எங்கள் கட்சியின் வாக்குகள் அனைத்தும் காங்கிரசுக்கு கிடைத்தன. இதனால்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியால் 6 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது.

காங்கிரசுக்குத்தான் பலன்

மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை வேறுபட்டிருக்கலாம். ஆனால், தனித்துப் போட்டியிட்ட இடங்களில் அந்த கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரசுக்குத்தான் பலன் கிடைக்கும். கூட்டணி அமையாவிட்டாலும் எங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. ஆனால், காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.எனவே, காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளுக்கு மேல் கேட்காமல், கூட்டணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பதிலடி

சமாஜ்வாடி கட்சி எம்.பி.யின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உத்தரபிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி கூறுகையில், "இந்தியா கூட்டணி காரணமாகத்தான் சிவ்பால் சிங் படேல் எம்.பி.யாக முடிந்தது. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவர்களை சமாஜ்வாடி கட்சி கட்டுப்படுத்த வேண்டும். அவர் தனது வரம்பை உணர்ந்து பேச வேண்டும்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com