

புதுடெல்லி,
மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது.
இந்த நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகளை நீக்கம் செய்தது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல். ரபேல் விவகாரத்தை நீர்த்துப்போகவே முயற்சி நடந்துள்ளது. ஆதாரத்தை அழிக்க அரசு முயல்கிறது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பினார்.
ரபேல் ஒப்பந்த விவகாரம் பற்றி சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா விசாரணை நடத்த கூடிய சாத்தியம் உள்ள நிலையில் அவரை கட்டாயப்படுத்தி மத்திய அரசு விடுமுறையில் அனுப்பி உள்ளது என அவர் கூறினார்.
இந்த நிலையில் இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சி அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து விட்டது.
ரபேல் ஜெட் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் பொய்களை தயாரித்து வருகிறார் என கூறினார். ராகுல் மாயையில் வாழ்ந்து வருகிறார். அவரை விட இந்திய குடிமக்கள் அதிக பக்குவமுடன் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.