அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி ராகுல், பிரியங்கா பேரணி


அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி ராகுல், பிரியங்கா பேரணி
x
தினத்தந்தி 6 Dec 2024 12:06 PM IST (Updated: 6 Dec 2024 12:23 PM IST)
t-max-icont-min-icon

அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியும், மாஸ்க் அணிந்தும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுப்பட்டனர்.

புதுடெல்லி,

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல், பிரியங்கா உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர். அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விவாதிக்க அனுமதி மறுப்பதாக கூறி அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தடுப்பதாக குறிப்பிடும் வகையில் கருப்பு மாஸ்க் அணிந்தும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணிக்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும்போது அரசியலமைப்பு புத்தகத்தை ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கையில் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story