

பாவ்நகர்,
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரோஹிங்யா அகதிகள் மற்றும் காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் நிலைப்பாட்டை தெளிவு செய்ய வேண்டும் என்றார்.
அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது பயங்கரவாதிகள் நம்முடைய ராணுவ வீரர்களை கொன்றார்கள், பொதுமக்கள் தண்டனையில் சிக்கி தவித்தனர். ஆனால் பாரதீய ஜனதா கட்சி பயங்கரவாதிகளுக்கு எதிராக சர்ஜிக்கல் தாக்குதலை முன்னெடுத்தது. நம்முடைய ராணுவ வீரர்கள் எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்ற பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவிட்டு இந்தியாவிற்கு திரும்பினர். பிரதமர் மோடி காஷ்மீரில் நிலையை இயல்பு நிலைக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், ஆனால் ப.சிதம்பரம் குஜராத்திற்கு வந்து, காஷ்மீர் சுயாட்சிக்கு வலியுறுத்துகிறார்.
இவ்விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
ரோஹிங்யா அகதிகளை இந்தியாவிற்கு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் கடிதம் எழுதி உள்ளனர். இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை குஜராத் மக்கள் கேட்க வேண்டும். உள்நாட்டு பாதுகாப்புடன் இந்தியா விளையாட முடியுமா? உள்நாட்டு பாதுகாப்பை இந்தியா சமரசம் செய்ய முடியுமா? ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என குஜராத் மக்கள் அக்கட்சியிடம் கேட்க வேண்டும், என்றார் அமித் ஷா.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு மோடி அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார் அமித் ஷா. ரோஹிங்யா அகதிகளை இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு விரும்புகிறது, ஆனால் காங்கிரஸ் மத்திய அரசு அனைத்து தரப்பு உள்ளடங்கிய குழுவை உருவாக்க வேண்டும், இவ்விவகாரம் தொடர்பாக கொள்கையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.