ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். #RahulGandhi
ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
Published on

புதுடெல்லி,

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் விவாதம் செய்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அவர் பேசி முடிக்கும்போது, தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறிச் சென்று, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பிரதமர் மோடியும் ராகுலை அழைத்துக் கைகொடுத்தார்.

இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டாலும், பாஜகவினரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்துவிட்டு, ராகுல் காந்தி தனது இருக்கையில் அமர்ந்து, கண்ணைச் சிமிட்டினார்.

இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், ''ராகுல் காந்தியின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இந்த அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர். அவருக்கென மரியாதை உண்டு. அவர் நரேந்திரமோடி அல்ல, நாட்டின் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை விரும்பியிருக்கலாம். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை.

அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி அமர்ந்த பின் கண்ணை சிமிட்டியது எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. சபையின் மாண்பைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். ராகுல் காந்தி எனக்கு மகன் போன்றவர். பிள்ளைகள் தவறு செய்தால், அதை தட்டிக்கொடுத்து, அவர்களை மெருகேற்றவேண்டியது தாயின் கடமையாகும்'' என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி பேசி முடித்தவுடன் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், ''சிலர் திடீரென அவையில் கட்டிப்பிடி இயக்கத்தை நடத்திவிடுகிறார்கள்'' என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் பெரும் கூச்சலிட்டதால், சில நிமிடங்கள் அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். அதன்பின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பேசுகையில், ''இது நாடாளுமன்றம், 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' (வசூல் ராஜா எம்பிபிஎஸ்) திரைப்படம் அல்ல. கட்டிப்பிடித்து விளையாடுவதற்கு'' என்று கண்டனம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com