

புதுடெல்லி,
ரபேல் போர் விமான பேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேட்டி அளித்தார்.
இதை மத்திய மந்திரிகள் கடுமையாக சாடினர்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ராகுல் காந்தியின் பொய் தயாரிப்பு தொழிற்சாலை தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறது. ரபேல் விவகாரத்தில் அவர் மேலும் ஒரு பொய்யை வழங்கி இருக்கிறார் என குறிப்பிட்டார்.
மேலும் அவர், ரபேல் போர் விமான பேரத்தை ரத்து செய்து விட வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சுமத்தினார்.
மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை மந்திரி கிரிராஜ் சிங் கருத்து தெரிவிக்கையில், அவருக்கு (ராகுல் காந்திக்கு) இப்போதைய தேவை ஒரு மனநல மருத்துவர்தான். சுப்ரீம் கோர்ட்டும் கூட ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்து விட்டது என்று கூறினார்.