

புதுடெல்லி,
லாலு பிரசாத் யாதவ் பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக லாலு மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார் ரூ.44 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும், பீகார் மாநில முன்னாள் முதல்மந்திரியுமான ராப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதைப்போல லாலுவின் மகனும், பீகார் முன்னாள் துணை முதல்மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.