ரெயிலில் தவறவிட்ட குழந்தையின் பொம்மை... வீடு தேடிச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே போலீசார்

தெலங்கானாவில் ரெயிலில் தவறவிட்ட குழந்தையின் பொம்மையை மேற்கு வங்கத்திற்கு நேரில் சென்று ரெயில்வே போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
ரெயிலில் தவறவிட்ட குழந்தையின் பொம்மை... வீடு தேடிச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே போலீசார்
Published on

கொல்கத்தா,

கடந்த புதன்கிழமை தெலங்கானா மாநிலம் செகந்தரபாத்தில் இருந்து திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா நகருக்குச் செல்லும் ரெயிலில் பயணம் செய்த புசின் பட்நாயக் என்ற நபர், ரெயில்வே துறையின் 139 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், ரெயிலில் தன்னுடன் பயணம் செய்த தம்பதியினர் ரெயிலை விட்டு இறங்கும் போது தங்களது குழந்தையின் விளையாட்டு பொம்மையை ரெயிலிலேயே தவற விட்டுச் சென்றதாக கூறியுள்ளார். மேலும் அந்த பொம்மை அந்த குழந்தைக்கு மிகவும் பிடித்தது என்பதை தான் கவனித்ததாகவும், எனவே அதை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நூதன கோரிக்கையை ரெயில்வே போலீசார் ஏற்றுக் கொண்டதோடு, உடனடியாக அந்த தம்பதியினர் குறித்த தகவல்களை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். செகந்தராபாத்தில் டிக்கெட் முன்பதிவிற்காக அவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் மூலம் அந்த தம்பதியினரின் முகவரியை கண்டறிந்ததோடு, நியூ ஜகல்புரி ரெயில் நிலையத்தில் பட்நாயக்கிடம் இருந்து அந்த குழந்தையின் பொம்மையையும் அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.

அந்த தம்பதியின் பெயர் மோகித் ரஸா-நஸ்ரின் பேகம் என்பதும் அவர்களது வீடு மேற்கு வங்க மாநிலம், உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள காசி கோவன் கிராமத்தில் உள்ளது என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அந்த தம்பதியினரின் வீட்டிற்கு நேரில் சென்ற ரெயில்வே போலீசார், பொம்மையை அவர்களது குழந்தையிடம் ஒப்படைத்தனர்.

தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்த பொம்மை தொலைந்து போனது குறித்து வருத்தமாக இருந்தாலும், இது குறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என்று நினைத்ததாகவும், ரெயில்வே போலீசார் தங்கள் குழந்தையின் பொம்மையை திரும்ப கொண்டு வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது எனவும் குழந்தையின் தந்தை மோகித் ரஸா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com