கடந்த 6 ஆண்டுகளில் ரெயில்வேயில் 72 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு

ரெயில்வேயில் கடந்த 6 ஆண்டுகளில் 72 ஆயிரம் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 6 ஆண்டுகளில் ரெயில்வேயில் 72 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு
Published on

ரெயில்வேயில் சிக்கனம்

நாட்டின் மிக அதிக பணியாளர்களைக் கொண்ட அரசு துறையாக ரெயில்வே இயங்குகிறது. இந்த ரெயில்வே துறையில் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட பணியிடங்களை குறைக்க ரெயில்வே நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதிக வேலை இல்லாத ஊழியர்களை, அவசியமான பணியிடங்களில் அமர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு வாய்ப்பு பெரும்பாலும் இல்லாத ஸ்டோர் கலாசி, பெயிண்டர், கார்பெண்டர், தோட்டக்காரர், உதவி சமையல்காரர், விற்பனையாளர், சமையல் உதவியாளர், உதவி விற்பனையாளர் பணியிடங்களை ஒழித்துக்கட்டி, அவர்களை அவசியமான பணிகளில் அமர்த்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

72 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு

இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் இப்படி 72 ஆயிரம் பணியிடங்களை ரெயில்வே ஒழித்துக்கட்டி இருப்பது இப்போது அதிகாரபூர்வமாக அம்பலத்துக்கு வந்துள்ளது.

இந்த பணியிடங்கள் அனைத்தும் சி மற்றும் டி பிரிவு சார்ந்தவை ஆகும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த பணியிடங்கள் தேவையற்றுப்போய் விட்டன என சொல்லப்படு கிறது. எதிர்காலத்தில் இந்த பணியிடங்களில் நியமனங்கள் இருக்காது. தற்போது பணியில் இருப்பவர்களும் ரெயில்வேயின் பிற பிரிவுகளுக்கு மாற்றப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது. ரெயில்வே செயல்பாடுகள் நவீனமயமாகியும், டிஜிட்டல் மயமாகியும் இருப்பதால், இந்த பணியிடங்கள் அகற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 9 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு

72 ஆயிரம் பணியிடங்களை ஒழித்துக்கட்டியது தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:-

* 16 மண்டல ரெயில்வே 2015-16 முதல் 2020-21 வரையிலான நிதி ஆண்டுகளில் 56 ஆயிரத்து 888 அத்தியாவசியமற்ற பணியிடங்களை சரண் செய்து ஒப்படைத்துள்ளளன.

* இன்னும் 15 ஆயிரத்து 495 பணியிடங்கள் ஒழிக்கப்படுகின்றன.

* வடக்கு ரெயில்வே 9 ஆயிரம் பணியிடங்களையும், தென்கிழக்கு ரெயில்வே 4,677 பணியிடங்களையும், தெற்கு ரெயில்வே 7,524 பணியிடங்களையும், கிழக்கு ரெயில்வே 5,700 பணியிடங்களையும் ஒழித்துள்ளன.

* பணியிடங்களை ஒழித்துக்கட்டும் இந்த செயல்முறை முடிகிறபோது, மேலும் 9 ஆயிரம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும்.

ரெயில்வே தனது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியத்துக்காக செலவிட்டு வந்துள்ளது. தற்போது ரெயில்வே, ஒரு ரூபாயில் 37 பைசாவை சம்பளத்துக்காகவும், 16 பைசாவை ஓய்வூதியத்துக்காகவும் செலவிடுவதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com