ரெயில் இருக்கை ஒதுக்கீடு - விரைவில் புதிய நடைமுறையை அமல்படுத்த ரெயில்வே திட்டம்

தற்போதுள்ள நடைமுறையின்படி, ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது
புதுடெல்லி,
இந்திய ரெயில்வேயில் தற்போதுள்ள நடைமுறையின்படி, ரெயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரெயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இந்த திட்டத்தின் சோதனை நடைபெறுகிறது. அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தில் ஏதேனும் மாற்றம், மீண்டும் பயண தேதியை திட்டமிட ஏதுவாக அமைகிறது. பயணிகளின் ரெயில் பயணத்தை எளிதாக்குவது இதன் நோக்கமாகும் எனவும் இந்த திட்டம் குறித்த பயணிகளின் கருத்துகள் முழுவதுமாக அறியப்பட்டு அது தொடர்பான அறிக்கை ரயில்வே நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.