உலகின் மிக உயரமான ரெயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி
ஆற்றின் மேல் 1,178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், உலகின் மிக உயரமான ரெயில் பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரை நாட்டின் பிற ரெயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரெயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆற்றின் மேல் 1,178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், உலகின் மிக உயரமான ரெயில் பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட, 115 அடி அதிக உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. மலைகளுக்கு இடையிலும், ஆற்றின் மீதும் கட்டப்பட்டுள்ள செனாப் ரெயில் பாலம், நிலநடுக்கம் மற்றும் குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று 8 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயிலை செனாப் ரெயில் பாலத்தின் மீது இயக்கி சோதிக்கப்பட்டது. ரெயில் பாலத்தில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டதாகவும், இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும் மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.