ரெயில்வேயில் வேலை என அறிவிப்பு; பா.ஜனதா அரசின் அடுத்த ஏமாற்று வித்தை ப. சிதம்பரம் விமர்சனம்

ரெயில்வேயில் வேலை என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை, அடுத்த ஏமாற்று வித்தை என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
ரெயில்வேயில் வேலை என அறிவிப்பு; பா.ஜனதா அரசின் அடுத்த ஏமாற்று வித்தை ப. சிதம்பரம் விமர்சனம்
Published on

ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரெயில்வேயில் புதிதாக 2 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்படுவார்கள். இந்த நியமனம் 2 கட்டங்களாக நடைபெறும். இது தவிர்த்து மேலும் 1 லட்சத்து 51 ஆயிரத்து 548 பணியாளர்களை வேலையில் அமர்த்தும் நடவடிக்கை கடந்த ஆண்டு தொடங்கி விட்டது. மொத்தமாக சுமார் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிற ரெயில்வே மிகப்பெரிய துறையாக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

கூடுதல் பணி நேரம், திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம், குறைவான செயல்திறன், மேம்படுத்துவதில் தடைகள் ஆகிய நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு விடும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, கூடிய விரைவில் காலி இடங்களை நிரப்பி விடுவோம். இதன்மூலம் ரெயில்வேயில்தான் காலி இடங்கள் மிக வேகமாக நிரப்பப்படுகின்றன என்ற பெயர் கிடைக்கும். தற்போது இந்திய ரெயில்வேயில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 6 ஆயிரத்து 598 ஆகும்.

2 லட்சத்து 82 ஆயிரத்து 976 பணியிடங்கள் காலியாக உள்ளன. 1 லட்சத்து 51 ஆயிரத்து 548 பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. மீதி 1 லட்சத்து 31 ஆயிரத்து 428 பணியிடங்கள் காலியாக இருக்கும். சுமார் 53 ஆயிரம் பேர் 2019-20 நிதி ஆண்டிலும், 46 ஆயிரம் பேர் 2020-21 நிதி ஆண்டிலும் ஓய்வு பெறுவார்கள். இதன்மூலம் மேலும் 99 ஆயிரம் காலி பணியிடங்கள் உருவாகும் என்றார். ரெயில்வேயில் நடைபெறுகிற பணி நியமனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ப. சிதம்பரம் விமர்சனம்

பா.ஜனதா அரசின் இந்த அறிவிப்பை ஏமாற்று வித்தை என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், கடந்த 5 ஆண்டுகளாக 2,82,976 ரெயில்வேயில் பணியிடங்களை காலியாகவே வைத்திருந்த மத்திய அரசு, திடீரென விழித்துக் கொண்டு, அனைத்து காலிப் பணியிடங்களையும் அடுத்த 3 மாதங்களில் நிரப்ப உள்ளதாகக் கூறுகிறது. மத்திய அரசின் பல நிறுவனங்களில் இது தொடர்கிறது. ஒருபுறம் காலியிடம், ஒருபுறம் வேலைவாய்ப்புயின்மை என விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com