

புதுடெல்லி,
ரெயில் பயணிகளின் சேவையை சீரமைக்கவும், ரெயில் சேவையை பழைய நிலைமைக்கு படிப்படியாக கொண்டு வரவும், ரெயில்வே பயணிகள் முன்பதிவு சேவை அடுத்த 7 நாட்களுக்கு ஆறு மணி நேரம் மட்டும் செயல்படாது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு முந்தைய காலகட்ட ரெயில் சேவையை தொடர வேண்டி இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, இன்று இரவு 11.30 மணி தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி வரையிலான 6 மணி நேரத்துக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு சேவை செயல்படாது. அதனை தொடர்ந்து நவம்பர் 21ம் தேதி அதிகாலை வரை தினமும் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையிலான 6 மணி நேரம் இதே நடைமுறை தொடரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரெயில் டிக்கெட் முன்பதிவு, தற்காலிக முன்பதிவு, டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் ரெயில்வே குறித்த சந்தேகங்கள் உள்ளிட்ட சேவைகள் இந்த குறிப்பிட்ட 6 மணி நேரம் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.