

மும்பை,
பிரபல இந்தி நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. தொழில் அதிபரான இவரை ஆபாச படம் எடுத்து, அதை செல்போன் செயலிகளில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி கைது செய்தனர்.
மேலும் 20-ந் தேதி ராஜ்குந்த்ராவின் நிறுவன தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை அதிகாரி ரியான் தோர்பேவும் கைது செய்யப்பட்டார். தற்போது 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ராஜ்குந்த்ரா, ரியான் தோர்பே ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களின் மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்து இருந்தார்.
இந்தநிலையில் தங்கள் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என 2 பேரும் மும்பை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். தங்களை உடனடியாக விடுவித்து, மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த 2 உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.