பெங்களூருவில் தசராவுக்கு பிறகு ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்; மந்திரி அசோக் பேட்டி

பெங்களூருவில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்கள் தசராவுக்கு பின்பு மீண்டும் இடித்து அகற்றப்படும் என்று வருவாய்த்துறை மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் தசராவுக்கு பிறகு ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்; மந்திரி அசோக் பேட்டி
Published on

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெங்களூருவில் சமீபத்தில் பெய்த மழையால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளால் தான் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை வருவாய்த்துறையும், பெங்களூரு மாநகராட்சியும் சேர்ந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டது. முதற்கட்ட பணிகள் மட்டுமே முடிந்திருக்கிறது.

நவராத்திரி காரணமாக கடந்த சில நாட்களாக பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெறவில்லை. தசரா பண்டிகை முடிந்ததும் பெங்களூருவில் ராஜ கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீண்டும் இடித்து அகற்றப்படும். ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் இடித்து அகற்றப்படும்.

முதலில் வசதிப்படைத்தவர்கள்...

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் நடந்த ஆலோசனையில் சட்டவிரோதமாக ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார். அதனால் ராஜகால்வாய்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும், அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். இதில், வசதிப்படைத்தவர்கள், தொழில்அதிபர்கள், ஏழை, நடுத்தர வாக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற எந்த விதமான பாகுபடும் பார்க்கப்படாது. ஏனெனில் சட்டம் அனைவருக்கும் சமமானது.

வருவாய்த்துறை, மாநகராட்சி என்ஜினீயர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, எந்த பகுதிகளில் எல்லாம் ராஜகால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோ, அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது உறுதி. தற்போது 30-க்கும் மேற்பட்டோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற தடை பெற்றுள்ளனர்.

இதுபோன்று, கோர்ட்டுக்கு செல்லும் முன்பாக, அதிகாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வசதியாக கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏழைகளின் வீடுகள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வருவதால், இந்த முறை வசதிப்படைத்தவர்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை இடிக்கும் பணிகள் முதலில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com