ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவி தற்கொலை

பீகாரை சேர்ந்த மாணவி, ஐ.ஐ.டி. கல்லூரியில் சேர்வதற்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவி தற்கொலை
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் ஜெயஸ்ரீ. அவர் ஐ.ஐ.டி. கல்லூரியில் சேர்வதற்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார். கோட்டா நகரில் ஒரு பயிற்சி மையத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜெயஸ்ரீ பயிற்சி பெற்று வந்தார்.

அங்குள்ள விடுதியில் மாணவி ஜெயஸ்ரீ தங்கி இருந்தார். இரவு 11 மணியளவில், அவர் கோட்டா-ஜாலவார் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இது நடப்பாண்டில் கோட்டா நகரில் பயிற்சி மையம் தொடர்பான 7-வது தற்கொலை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com