ராஜஸ்தான் சட்டசபை ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் தொடங்க கவர்னர் உத்தரவு

ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தை நடத்த ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் சட்டசபை ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் தொடங்க கவர்னர் உத்தரவு
Published on

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அந்த மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கொறடா உத்தரவை மீறும் வகையில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அவர்களுக்கு சபாநாயகர் சி.பி.ஜோஷி தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த 24-ந் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையே, சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க விரும்பும் முதல்-மந்திரி அசோக் கெலாட், கவர்னரை சந்தித்து, சட்டசபையை கூட்டுமாறு கேட்டுக் கொண்டார். முதல் முறை அனுப்பிய கோரிக்கையை கவர்னர் நிராகரித்ததை தொடர்ந்து சட்டசபையை கூட்டுமாறு 2-வது முறையாக மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சட்டசபையை கூட்ட தயார் என்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, திருத்தப்பட்ட அந்த கோப்பை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.

இதனிடையே இன்று சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று 3-வது முறையாக கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை அவரது மாளிகை சென்று சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையை கூட்டுவது தொடர்பாக வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தை கூட்ட கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்க வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் கவர்னர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com