கன்னையா லால் குடும்பத்தை நேரில் சந்தித்து முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆறுதல்

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லால் குடும்பத்தை சந்தித்து அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆறுதல் தெரிவித்தார்
கன்னையா லால் குடும்பத்தை நேரில் சந்தித்து முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆறுதல்
Published on

உதய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வந்த தையல்காரர் கன்னையா லால் (வயது 40). இவர் சமூக வலைத்தளங்களில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார் என கூறிப்படுகிறது. இது தொடர்பாக லாலுக்கு கொலை மிரட்டல் வந்து, அவர் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், கன்னையா லாலை, 2 பேர் கூர்மையான கத்திகளால் கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இந்த கொலைக்காட்சிகளை கொலையாளிகளே வீடியோவாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். கன்னையாலால் கொலை சம்பவத்தால் பெரும் மத பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லால் குடும்பத்தினரை அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com