

ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள கன்வார்புரா கிராமத்தில் அரசு பள்ளியை பார்வையிடச் சென்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குழுவினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கரப்பான் பூச்சி குழுவினர் வந்த கார் சேதப்படுத்தப்பட்டதாகவும், சிலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்கள் வாயிலாக தொடங்கப்பட்ட கரப்பான் ஜனதா கட்சி, அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை சுட்டிக்காட்டும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூர் அருகே உள்ள கன்வார்புரா அரசு பள்ளியை பார்வையிட அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் சென்றனர். கிராம மக்கள்தான் தங்களை பள்ளியை ஆய்வு செய்ய வருமாறு அழைத்ததாக கரப்பான் பூச்சி கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பள்ளிக்குள் சென்ற கரப்பான் பூச்சி குழுவினருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளியை சீரமைக்க ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சிலர் கரப்பான் பூச்சி குழுவினர் மீது கற்களை வீசியதாகவும், இதில் அவர்கள் வந்த கார் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தரப்பில் தங்கள் குழுவினர் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுக்கு பா.ஜ.க.வினரே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பந்தபட்ட விடியோ வெளியாகி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் ராஜஸ்தான் சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை மறுத்துள்ள பா.ஜ.க. தரப்பு, கரப்பான் பூச்சி குழுவினரின் வருகைக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.