

ஜெய்ப்பூர்,
கொரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து, பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. எனினும் கொரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.