

ஜெய்ப்பூர்
ராஜஸ்தானில் கவர்னர் ஹரிபாவ் பாக்தே, வழக்கம்போல் மேற்கொள்ளும் உடல்நல பரிசோதனைக்காக சவாய் மான் சிங் மருத்துவமனைக்கு நேற்று சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளிப்பது என டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதுபற்றி அந்த மருத்துவமனை அலுவலகம் வெளியிட்ட செய்தியில், கவர்னருக்கு சிகிச்சை அளிக்க 9 மருத்துவர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அவருடைய உடல்நிலையை சீராக கவனித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டது. அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் கவர்னர் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதுபற்றி மருத்துவமனையின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுநீர் கழிக்கும் பகுதியில் தொற்று ஏற்பட்டதற்கான அடையாளம் தெரிய வந்துள்ளது. இதனால், அவர் உடனடியாக ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டார் என கூறினார்.
தொடர்ந்து சிறப்பு மருத்துவ குழுவினரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அவர் இன்று வைக்கப்பட்டார். இதில், அவருக்கு உடல்நலம் தேறியது. இறுதிக்கட்ட மதிப்பீட்டுக்கு பின்னர், அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிகிச்சையின்போது அவருடைய உடல்நிலை சீராக இருந்தது. டிஸ்சார்ஜுக்கு பின்னர், உடனே சுற்றுப்பயணம் போன்ற வேலைகளில் ஈடுபடாமல், ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அவரை அறிவுறுத்தி உள்ளனர்.