”விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ” ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.
”விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ” ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அறிவிப்பு
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 6-ம் தேதி அறிவித்தது. அதன்படி ராஜஸ்தானில் ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஆளும் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ராஜஸ்தானின் அஜ்மீரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்தநிலையில், அம்மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் வரும் நவம்பர் முதல் அமலுக்கு வரும். இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 12 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் குறித்து மாநில மின் வாரிய துறை மூத்த அதிகாரிகள் கூறியபோது,

"நேரடி மானியத் திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் விநியோகிக்கப்படும். இதன்படி விவசாயிகள் முதலில் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். அவர்கள் செலுத்திய தொகை அரசு தரப்பில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.833 விவசாயிகளுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலோட் கூறுகையில்,

வசுந்தரா ராஜே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனக்கூறி விவசாயிகளை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்த பின்னரே விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அறிவித்தார். ஐந்து ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஏன் கொடுக்கவில்லை?

ஐந்து ஆண்டு கால ஆட்சியில், பாரதிய ஜனதா அரசாங்கம் மின் கட்டணத்தை மூன்று முறை உயர்த்தி உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் விவசாயிகள் ஈர்க்கப்பட மாட்டார்கள் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com