

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் இன்று காலை 6 மணியளவில், மினிபஸ் ஒன்று சாலையோரம் இருந்த 15 அடி ஆழ கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த பேருந்தில் 23 பயணிகள் இருந்தனர்.
அதிகாலை நேரம் என்பதால், பஸ்சில் இருந்த பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். மினிபஸ் விபத்தில் சிக்கியது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பேருந்துக்குள் தண்ணீரும், சகதியும் புகுந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கிரேன் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பஸ் டிரைவர் தூங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.