ராஜஸ்தானில் இந்து மத ஊர்வலத்தில் கல் வீச்சு சம்பவத்தால் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல் - போலீஸ் குவிப்பு

ராஜஸ்தானில் பெரும் மத கலவரம் வெடித்தது.இதனை அடுத்து 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ராஜஸ்தானில் இந்து மத ஊர்வலத்தில் கல் வீச்சு சம்பவத்தால் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல் - போலீஸ் குவிப்பு
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி நகரில், நேற்று (சனிக்கிழமை) மாலை கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களை ஒட்டி கரவ்லி மாவட்டம் அமைந்துள்ளது.இந்து நாட்காட்டியின் கீழ் புத்தாண்டின் முதல் நாளான நவ் சம்வத்சர் கொண்டாடும் விதமாக கரவ்லி நகரில், முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி வழியாக மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. அப்போது மோட்டார் சைக்கிள் பேரணியின் மீது கல் வீசப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு பெரும் மத கலவரம் வெடித்தது. இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மத கலவரம் காரணமாக, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நீடிக்கிறது. இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து, கூடுதல் போலீஸ் டிஜி(நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு) ஹவா சிங் குமாரியா கூறியதாவது:-

இந்து புத்தாண்டை முன்னிட்டு நேற்று மாலை இந்து அமைப்பினர் மத வழிபாட்டு பைக் பேரணியில் ஈடுபட்டனர்.

அந்த ஊர்வலம் ஒரு மசூதியை அடைந்தபோது, சிலர் அவர்கள் மீது கற்களை வீசினர். இதனால், மறுபுறம் கல் வீச்சும், தீ வைப்புகளும் நடந்தன.

அதில் சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போது, இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர்.

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரவ்லிக்கு 600 போலீசார் கொண்ட கூடுதல் படை அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர் என்று நேற்று தெரிவித்தார்.

முதல் மந்திரி அசோக் கெலாட், டிஜிபியிடம் பேசி, அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சியான பாஜக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை விமர்சித்தது. நிர்வாகத்தின் மெத்தனத்தால் மத நல்லிணக்கம் சீர்குலைந்தது. பேரணிக்கு முன்னதாக நிர்வாகம் எச்சரிக்கையாக இருந்திருந்தால், இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று முன்னாள் முதல் மந்திரி பாஜகவின் வசுந்தரா ராஜே கூறினார்.

இதற்கிடையில், மாவட்டத்தில் ஏப்ரல் 3ம் தேதி(இன்று) நள்ளிரவு வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கரவ்லி நிர்வாகம் பரத்பூர் கோட்ட கமிஷனருக்கு கடிதம் எழுதியது. மேலும், வதந்திகள் எதுவும் பரவாமல் இருப்பதற்காக, கரவ்லியில் அடுத்த உத்தரவு வரும் வரை இணையத்தை தடை செய்துள்ளோம் என்று கூடுதல் போலீஸ் டிஜி குமாரியா தெரிவித்தார்.

இந்த மோதலில் குறைந்தது 36 பேர் காயமடைந்தனர். அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொது சொத்துக்கு சேதம், கலவரத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் செயலில் ஈடுபட்டதாகவும், வெடி பொருள் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாரத்பூர் சரக ஐஜி, பிரஷன் குமார் கமேசரா இன்று தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய, ராஜஸ்தான் காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் கரவ்லியில் முகாமிட்டிருந்தனர்.

நேற்று இரு சமூகத்தினரையும் சந்தித்து பேசினோம். எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தப்பவில்லை என்ற ஒருமித்த கருத்தை உருவாக்க இன்றும் ஒரு கூட்டத்தை நடத்துவோம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com