இந்திய தேர்தல் பணி, அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்

பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் வாக்களிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடுகள் செய்திருப்பது பாராட்டுக்குரியது என்று திரவுபதி முர்மு தெரிவித்தார்.
இந்திய தேர்தல் பணி, அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்
Published on

புதுடெல்லி,

தேர்தல் கமிஷன் தொடங்கப்பட்ட ஜனவரி 25-ந் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. 14-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். 'நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் கமிஷனின் முன்முயற்சிகள்' குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட புத்தகத்தை ஜனாதிபதியிடம் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் அளித்தார்.

சிறப்பு தபால்தலையை ஜனாதிபதி வெளியிட்டார். 'என் ஓட்டு, என் கடமை' என்ற விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, "கடந்த 75 ஆண்டுகளில் 17 மக்களவை தேர்தல்களையும், 400-க்கு மேற்பட்ட சட்டசபை தேர்தல்களையும் தேர்தல் கமிஷன் நடத்தி உள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடத்துவது, உலகிலேயே மிகப்பெரிய தளவாட பணி ஆகும்.

12 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்கிறார்கள். அதற்காக ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

தேர்தல் பணிகளில் நவீன தொழில்நுட்பத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்துவது அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.

பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் வாக்களிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடுகள் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

இளைஞர்கள்தான், நமது ஜனநாயகத்தின் எதிர்கால தலைவர்கள் ஆவர். வாக்காளர் அட்டை பெற்று முதல்முறையாக வாக்களிக்க போகும் இளைஞர்களை வாழ்த்துகிறேன். வாக்குரிமை பெற்ற பிறகு அவர்களது கடமைகள் அதிகரித்துள்ளன.

இங்குள்ள இளம் வாக்காளர்கள், கோடிக்கணக்கான இளைஞர்களின் பிரதிநிதிகள் ஆவர். அவர்கள் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை கட்டமைப்பதில் உறுதியான பங்கு வகிப்பார்கள்" அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com