ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம் வாட்டாள் நாகராஜ்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம் என கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். #Rajinikanth #KamalHaasan #vatalnagaraj
ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம் வாட்டாள் நாகராஜ்
Published on

பெங்களூர்,

காவிரி நதிநீர் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி அன்று தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த 6 வார காலக்கெடு முடிவடைந்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை கண்டித்து கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்றுமுன்தினம் போராட்டம் நடத்தினார். அப்போது தமிழக அரசின் உருவ பொம்மையை தீவைத்து எரித்து எதிர்ப்பை பதிவு செய்தார். இதில் பல்வேறு கன்னட அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எக்காரணம் கொண்டும் தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தினார்.

அப்போது வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும். எக்காரணம் கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது. வருகிற 5-ந் தேதி கர்நாடகம்-தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் சாலைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம்.

அன்றைய தினம் தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக கர்நாடகத்திலும் முழு அடைப்பு நடத்துவோம். நாட்டை உடைக்கும் வகையில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் கண்டிக்கிறோம். காவிரி விஷயத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் படங்களை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com