அரசியல் அமைப்பு பற்றி ரஜினிகாந்திற்கு எதுவும் தெரியாது: சுப்ரமணியன் சுவாமி

அரசியல் அமைப்பு பற்றி ரஜினிகாந்திற்கு எதுவும் தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு பற்றி ரஜினிகாந்திற்கு எதுவும் தெரியாது: சுப்ரமணியன் சுவாமி
Published on

புதுடெல்லி,

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளை வெளியிட்டு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். என் வாழ்க்கை கடவுள் கையில் இருக்கிறது என்றும், நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றும் அவர் பேசியது அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அதிரடி அறைகூவலும் விடுத்து இருக்கிறார். இதனால் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்திற்கு அரசியல் அமைப்பு பற்றி எதுவும் தெரியாது என்று பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:- தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. நல்ல வசனங்களை பேசி மக்களை மகிழ்விக்கலாம்.

அரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜர் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com