ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ‘பெல்ட்’ வெடிகுண்டு தொடர்பான விசாரணை அறிக்கை - சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பெல்ட் வெடிகுண்டு தொடர்பான விசாரணை நிலவர அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ. சிறப்பு குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ‘பெல்ட்’ வெடிகுண்டு தொடர்பான விசாரணை அறிக்கை - சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ராஜீவ்காந்தியை கொலை செய்ய தனு மனித வெடிகுண்டாக மாறினார். அவர் பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பெல்ட் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சி.பி.ஐ., சிறப்புக்குழு தயாரித்த விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்புக்கு கொடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சி.பி.ஐ., பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் தரப்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், வக்கீல் பிரபு ராமசுப்பிரமணியம் ஆகியோர் ஆஜரானார்கள்.

அவர்கள் வாதிடுகையில், இந்த வழக்கு ஓராண்டாக விசாரிக்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரம் 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. எனவே, இந்த விசாரணையை விரைந்து நடத்தி பெல்ட் வெடிகுண்டு தொடர்பான சமீபத்திய விசாரணை நிலவர அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறினர்.

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் தனது வாதத்தில் பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்த சமீபத்திய அறிக்கை தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருவதாக கடந்த ஓராண்டுக்கு முன்பாக அறிக்கை அளித்தும் இன்னும் விசாரணை முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்கள். கவர்னர் முன்பு உள்ள கருணை மனுவின் மீது முடிவு எடுக்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பேரறிவாளன் தரப்பில், தங்களுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, பெல்ட் வெடிகுண்டு தொடர்பான தற்போதைய நிலை குறித்த அறிக்கையை 4 வாரங்களுக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com