ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலையை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் கே.எஸ்.அழகிரி உறுதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் என கே.எஸ்.அழகிரி உறுதிபட தெரிவித்தார்.
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலையை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் கே.எஸ்.அழகிரி உறுதி
Published on

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் தொடர்ந்து வலுத்து வருகிறது.

சமீபத்தில் கூட பிரதமர் மோடியை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர், மேற்படி 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

இதன்மூலம் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொலைபேசி மூலம் பேட்டியளித்தார்.

அப்போது ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் உள்பட ஏராளமானோர் தமிழக சிறைகளில் இருக்கின்றனர். அப்படியிருக்க ராஜீவ் கொலை கைதிகளை மட்டும் விடுதலை செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும், அது தவறான முன்னுதாரணமாகி விடும். அது தமிழகத்தின் சமூக அமைதியையும் கடுமையாக சீர்குலைக்கும் என்று தெரிவித்தார்.

நீதித்துறை முடிவுகளில் தலையிடுவது ஏன்? என கேள்வி எழுப்பிய கே.எஸ்.அழகிரி, இந்த விவகாரத்தை கோர்ட்டு முடிவு செய்யட்டும் எனவும், சட்டம் தனது கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com