

புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்திலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதி வரப்பெற்றுள்ளது என்று பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த நிதி சுதந்திர வணிக ஒப்பந்தத்தை இருநாடுகளிடையே ஊக்குவிக்க லஞ்சமாக அளிக்கப்பட்டதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அவர் ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்பது காங்கிரஸ் கட்சியின் ஒரு நீட்சிதான் என்று கூறினார். மேலும், '2009-11இல் இந்தியா-சீனா இடையே சுதந்திர வணிக ஒப்பந்தத்தை ஊக்குவிக்க ராஜீவ் காந்தி அறக்கட்டளை பிரச்சாரம் செய்து வந்தது. இந்திய - சீன சுதந்திர வணிகத்தை, 'விரும்பத்தக்கது, எளிதானது, பயன் தரக்கூடியது' என்று காங்கிரஸ் வர்ணித்தது.
சீனாவுடனான சுதந்திர வணிக ஒப்பந்தத்தை ஊக்குவிக்க ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனா லஞ்சமாக நிதியளித்ததா? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 33 மடங்கு அதிகரித்தது, அதற்குத்தான் லஞ்சமாக நிதியா? என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், எந்த ஒரு கல்வி அல்லது பண்பாட்டு அமைப்பும் அன்பளிப்பு பெறும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும். அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் ராஜீவ் காந்தி அறக்கட்டளை இதைத் தெரிவித்ததா?
2008-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது காங்கிரஸ். இதுவரை இந்த கட்சி உறவுக்கான அவசியம் என்ன என்பதை காங்கிரஸ் விளக்கவில்லை.
பிற அரசியல் கட்சிகளுடன் இப்படி எத்தனைப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும் என்று ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.