

புதுடெல்லி,
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல்ரத்னா விருதில் ராஜீவ்காந்தி பெயர் நீக்கப்பட்டது. மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது என்று மாற்றப்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதை காங்கிரஸ் கட்சி வரவேற்றபோதிலும், பிரதமர் மோடியை குறை கூறியுள்ளது. அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அளித்த பேட்டி வருமாறு:-
மேஜர் தயான்சந்த் பெயரை கேல்ரத்னா விருதுக்கு சூட்டியதை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்கு தயான்சந்த் பெயரை பிரதமர் மோடி இழுத்திருக்க வேண்டாம். விருதுகளால் அறியப்படுபவர் அல்ல, ராஜீவ்காந்தி. தனது தியாகத்தால் அறியப்படுபவர்.
இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். இதுபோல், மைதானங்களுக்கு சூட்டப்பட்ட நரேந்திர மோடி, அருண் ஜெட்லி ஆகிய பெயர்களையும் நீக்கிவிட்டு, மில்காசிங், தெண்டுல்கர், கவாஸ்கர் போன்ற விளையாட்டு வீரர்கள் பெயரை சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.