ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கு: மனுதாரர்களுக்கு 3 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கில், மனுதாரர்களுக்கு 3 வார காலம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கு: மனுதாரர்களுக்கு 3 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிராக, அந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த 14 பேர்களில் மூன்று பேரின் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாஸ், ஜான் ஜோசப், மாலா ஆகியோரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கா நாராயணனும் சுப்ரீம் கோர்ட்டில் அதே ஆண்டில் மனு தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தமிழக அரசு, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் நலனை மட்டுமின்றி அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் மனநிலை மற்றும் சமூகம் குறித்தும் அக்கறை காட்டி இருக்க வேண்டும். இந்த குற்றவாளிகளை விடுதலை செய்வதாக எடுத்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டதோடு, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது ஆகும்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது மற்றும் அவர்களை விடுதலை செய்வது போன்றவை கவர்னர் மற்றும் ஜனாதிபதியின் அதிகார வரம்புக்கு உட்பட்டது ஆகும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சிவபாலமுருகன் ஆஜராகி, இந்த மனு 2014-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது என்றும், அதனால் மனுவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

குறிப்பாக சமீபத்தில் தமிழக அமைச்சரவை இந்த 7 பேரை விடுவிப்பது குறித்து எடுத்த முடிவை எதிர்ப்பது தொடர்பாக புதிய கூடுதல் விவரங்களை மனுவில் சேர்க்க இருப்பதாகவும், எனவே இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவில் திருத்தங்கள் செய்ய மனுதாரர் தரப்புக்கு 3 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்து இருக்கும் நிலையில், இப்படி ஒரு வழக்கு விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com