

புதுடெல்லி,
எக்ஸ் தளத்தில் அறிமுகமான முதல் நாளிலேயே கணவர் ராஜீவ் காந்தியுடனான காதல் கதையைப் பகிர்ந்த சோனியா காந்தி, தங்களது முதல் சந்திப்பு முதல் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் வரை நினைவுகூர்ந்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி, சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் முதல்முறையாகக் கணக்கைத் தொடங்கியுள்ளார். இதையொட்டி, தனது கணவர் ராஜீவ் காந்தியுடனான ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுமார் 2 நிமிட வீடியோவில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தையும், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
“கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் எனது காதல் பயணம் தொடங்கியது. ராஜீவும் நானும் அன்பு, சிரிப்பு, நினைவுகள் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கினோம். நவம்பர் 10-ம் தேதி அந்த உலகத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என்று தனது முதல் எக்ஸ் பதிவில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்தபோது ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்த சோனியா காந்தி, அவரது தோற்றத்தையும் குணத்தையும் பாராட்டியுள்ளார்.
“அவர் மிகவும் அழகானவர். அதே நேரத்தில், அவரிடம் இருந்த மென்மையான குணமும் வெளிப்பட்டது. அந்தப் பண்புதான் என்னை மிகவும் அவரிடம் கவர்ந்தது. அவரை முதன்முதலில் சந்தித்த அந்தத் தருணத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜீவ் காந்தியைத் தனக்கு ஓர் பொதுவான நண்பர் அறிமுகப்படுத்தியதாகக் கூறிய அவர், ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகப் பழகியதையும், நண்பர்களுடன் விருந்துகளுக்குச் சென்றதையும், சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
கேம்பிரிட்ஜில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த சோனியா காந்தி,
அன்றைய இங்கிலாந்தில் உணவு வகைகள் தனக்குப் பிடித்தவையாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் உணவுகள் அவ்வளவு சிறப்பாக இருக்காது. இன்றைக்கு இருப்பதைப் போல ஏராளமான உணவகங்களும் அப்போது இல்லை. எனக்குப் பிடித்த இத்தாலிய உணவுகளைச் சாப்பிடுவதற்கு ஏற்ற இடத்தைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.
அப்போது, ஐரோப்பிய மாணவர்கள் மட்டுமின்றி இந்திய மாணவர்களும் உணவருந்தச் செல்லும் ‘Varsity Restaurant’ என்ற கிரேக்க உணவகத்தை இருவரும் கண்டறிந்ததாகவும், அங்குதான் ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த முதல் சந்திப்பிலேயே ராஜீவ் காந்தியுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாகவும், அதே உணர்வு ராஜீவ் காந்திக்கும் இருந்ததைப் பின்னர் அறிந்துகொண்டதாகவும் சோனியா காந்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் ‘Belonging: A Journey of Love’ என்ற நினைவுப் புத்தகம் வரும் நவம்பர் 10-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
ஹார்பர்காலின்ஸ் இந்தியா (HarperCollins India) இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறது. முன்னதாக, புத்தகத்தின் இந்திய வெளியீடு தொடர்பாக ஏற்பட்ட பதிப்பகச் சிக்கல்களால் அதன் வெளியீடு குறித்த குழப்பம் நீடித்த நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பிந்தைய இத்தாலியின் வெனிட்டோ பகுதியில் தனது குழந்தைப் பருவத்தைத் தொடங்கும் இந்தப் புத்தகம், 1965-ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தது முதல் இந்தியாவில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டது வரையிலான அனுபவங்களை விவரிக்கிறது.
ராஜீவ் காந்தியுடனான திருமணம், தனது மாமியாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியுடனான அறிமுகம், இந்தியக் கலாசாரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட அனுபவங்கள் ஆகியவையும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தி மொழியைக் கற்றுக்கொண்டது, சேலை அணியப் பழகியது, இந்திய உணவு மற்றும் கலாசாரத்துடன் தன்னை இணைத்துக்கொண்டது உள்ளிட்ட தனது வாழ்க்கையின் முக்கியமான மாற்றங்களையும் சோனியா காந்தி அதில் விவரித்துள்ளார்.
மேலும், விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தது, 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது, 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது என காந்தி குடும்பத்தை உலுக்கிய பெரும் துயரங்களும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, பிரதமர் பதவியை ஏற்காமல் கட்சியையும் கூட்டணியையும் வழிநடத்த சோனியா காந்தி முடிவு செய்த அரசியல் நிகழ்வுகளும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றிய சோனியா காந்தி, அக்கட்சியின் மிக நீண்டகாலத் தலைவராகத் இருந்துள்ளார்.
முன்னதாக, தனது புத்தகம் “காதல், கடமை, இழப்பு மற்றும் தனக்கான ஓர் இடத்தைக் கண்டறிதல் ஆகியவற்றின் கதை” என்று சோனியா காந்தி இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது எக்ஸ் தளத்திலும் அறிமுகமாகியுள்ள அவர், தனது கணவர் ராஜீவ் காந்தியுடனான தனிப்பட்ட நினைவுகளைப் பகிர்ந்திருப்பது காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.