அரசியல் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது பினராயி விஜயனிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்பு

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அரசியல் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது பினராயி விஜயனிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்பு
Published on

புதுடெல்லி,

இடதுசாரிகள் ஆட்சி நடைபெறும் கேரளாவில் இடதுசாரி தொண்டர்கள் மற்றும் பா.ஜனதா - ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் நேற்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கொன்றதாக பா.ஜனதா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. விசாரணையை தொடங்கி உள்ள போலீஸ் 8 பேரை கைது செய்து உள்ளது.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் பாரதீய ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என கண்டிப்பை தெரிவித்து உள்ளார். இருவரும் தொலைபேசியில் பேசிய போது இப்போது நிலவும் அரசியல் வன்முறை தொடர்பாக ஆலோசனை செய்து உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில், கேரளாவில் நிலவி வரும் அரசியல் வன்முறை தொடர்பாக முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் பேசிஉள்ளேன். மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக கவலையை தெரிவு படுத்தினேன். ஜனநாயகத்தில் அரசியல் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் வன்முறைகள் தடுக்கப்படும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com