12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? - அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? - அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை உச்சம் பெற்றுள்ளதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே 4-ந்தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு தொடர்ந்ததால் அந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

இதைப்போல நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற தொழில்முறை கல்விக்கான நுழைவுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கட்டாய அடிப்படை என்பதால் அந்த தேர்வை நடத்தியே ஆகவேண்டும் என்பதில் மத்திய கல்வித்துறை உறுதியாக இருந்து வருகிறது.

ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சில கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள்.

அதே நேரத்தில் தேர்வை நடத்துவதில் உள்ள சிரமங்களை விட ரத்து செய்வதில் உள்ள சவால்கள் அதிகம் என கல்வி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே ஏதாவது ஒரு அளவீட்டின் படி ஆன்லைன் மூலம்கூட தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான இந்த குழப்பத்தை தீர்த்து, தேர்வு குறித்து ஒரு முடிவு எடுப்பதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டம் காலை 11:30 மணிக்கு தொடங்கியது

கூட்டத்துக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி மந்திரிகள், கல்வித்துறைச் செயலாளர்கள், மாநில கல்வி வாரிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். தொழில் முறை தேர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் சார்பில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, செயலாளர் தீரஜ் குமார் ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பகிரப்படும் கருத்துகளை மத்திய அரசு ஆய்வு செய்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? நடத்துவதாக இருந்தால் எப்படி நடத்துவது? என்பது பற்றி ஒரு வாரத்தில் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com