ஆசியான் பாதுகாப்பு மந்திரிகள் மாநாடு: பிலிப்பைன்ஸ் செல்கிறார் ராஜ்நாத் சிங்

2026-ம் ஆண்டுக்கான ஆசியான் பாதுகாப்பு மந்திரிகள் கூட்டமைப்பு பிளஸ் மாநாடு வரும் 28-ம் தேதி பிலிப்பைன்சில் நடைபெற உள்ளது.
பிலிப்பைன்ஸ் செல்கிறார் ராஜ்நாத் சிங்
Published on: 

புதுடெல்லி,

ஆசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த வாரம் பிலிப்பைன்ஸ் செல்ல உள்ளார்.

அக்டோபர் 28, 29-ந்தேதிகளில் மாநாடு

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் அக்டோபர் 28, 29-ந்தேதிகளில் 13-வது ஆசியான் பாதுகாப்பு மந்திரிகள் கூட்டமைப்பு பிளஸ் (ADMM-Plus) மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட முக்கிய சவால்களைச் சமாளிப்பது குறித்து இந்தியாவின் கருத்துகளை ராஜ்நாத் சிங் எடுத்துரைக்க உள்ளார்.

பிற நாட்டு மந்திரிகளுடன் சந்திப்பு

மாநாட்டில் பங்கேற்கும் ராஜ்நாத் சிங், பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகளையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்புகளின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கடந்த 1992-ம் ஆண்டு ஆசியானின் பேச்சுவார்த்தை கூட்டாளியாக இணைந்தது. ஆசியான் பாதுகாப்பு மந்திரிகள் கூட்டமைப்பு பிளஸ் (ADMM-Plus) அமைப்பின் முதல் மாநாடு 2010-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்றது.

இந்த அமைப்பின் கீழ், 2024 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர் பணிக்குழுவில் மலேசியாவுடன் இணைந்து இந்தியா தலைமை வகிக்கிறது.

2026-ம் ஆண்டுக்கான ஆசியான் பாதுகாப்பு மந்திரிகள் கூட்டமைப்பு பிளஸ் ADMM-Plus மாநாட்டுக்கு பிலிப்பைன்ஸ் தலைமை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com