மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பு: காங்கிரஸ் வேட்பாளர் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

மத்திய பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில், மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். அதாவது தெலுங்கானாவில் அவர் மீது நிலுவையில் உள்ள வழக்கை குறிப்பிடாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி, வேட்பாளர் மீனாட்சி நடராஜன் உள்ளிட்டோர் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அவர் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, அதுல் சந்துர்கர் அமர்வில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி, இந்த மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கின் விவரங்களை குறிப்பிடாததற்காக தவறுதலாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பின்னர் இந்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் கூறி, அதற்கு பட்டியலிடுமாறு அறிவுறுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com