

பஞ்சகுலா,
தனது பெண் சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் ராம் ரகீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சாமியார் ராம் ரகீம்சிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு எதிரான இரண்டு கொலை வழக்குகளை சிபிஐ நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி மற்றும் தேரா சச்சா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராம் ரகீம் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இன்று ராம் ரகீம் சிங் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக உள்ளார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஞ்சகுலா பகுதியில் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாலை பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வந்த பத்திரிகையாளரான சத்ரபதி கடந்த 2002 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். தேரா சச்சா சவுதா தலைமை இடத்தில் பாலியல் பலாத்காரம் நடைபெறுவதாக பெண் ஒருவர் எழுதிய கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டதற்காக இந்த கொலை நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல், தேரா தலைமையகத்தில் மேலாளராக பணியாற்றிய ரஞ்சித் சிங் என்பவரும் அதே ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த இரு கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைதான் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி, சாமியார் ராம் ராகீம் சிங், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்ததும் , சாமியாரின் ஆதரவாளர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 40 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.