பிரதிஷ்டைக்கு முன், பாலராமர் சிலை புகைப்படத்தை பகிர்ந்தவர் மீது கடும் நடவடிக்கை தேவை - தலைமை அர்ச்சகர் வலியுறுத்தல்

ராமரின் கண்கள் தெரியுமாறு வெளிவந்த சிலை உண்மையான சிலை அல்ல என்று தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதிஷ்டைக்கு முன், பாலராமர் சிலை புகைப்படத்தை பகிர்ந்தவர் மீது கடும் நடவடிக்கை தேவை - தலைமை அர்ச்சகர் வலியுறுத்தல்
Published on

அயோத்தி,

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த 15-ந்தேதி நிறைவடைந்தது. அதன்பின் ஜனவரி 16-ந்தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, நாளை வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் கிரேன் மூலம் ராமர் கோவிலின் கருவறைக்குள் ராம் லல்லாவின் சிலை வைக்கப்பட்டது. இதன் முதல் புகைப்படத்தை மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே வெளியிட்டிருந்தார். அதில் தங்க வில் மற்றும் அம்புடன் நிற்கும் ராம் லல்லாவின் முகத்தை மூடிய புகைப்படங்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ராம் லல்லாவின் கண்களை காட்டும் முழு சிலையும் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமியின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "புதிய சிலை இருக்கும் இடத்தில் பிராண பிரதிஷ்டை செய்யும் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. சிலையின் உடலை தற்போது ஆடைகளால் மூடியுள்ளனர். பிரான பிரதிஷ்டை முடிவதற்குள் ராமர் சிலையின் கண்கள் திறக்கப்படாது. ராமரின் கண்கள் தெரியுமாறு வெளிவந்த சிலை உண்மையான சிலை அல்ல. சிலையின் புகைப்படங்கள் எப்படி வைரலாகின்றன. இந்த செயலை யார் செய்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்" என்று ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

சிலை பிரதிஷ்டைக்கு முன்னரே ராமரின் முழு உருவ புகைப்படம் வெளியானது ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் தளத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் ராமரின் புகைப்படத்தை பகிர்ந்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து கோவில் அறக்கட்டளை சார்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com