

அயோத்தி ராமர் கோவில்
ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்டுவதற்கான சட்ட போராட்டங்கள் நீண்ட காலமாக நடந்து வந்தன. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்ரீம் கோர்ட்டு, ராமஜென்ம பூமியில் கோவில் கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு அனுமதி அளித்தது.அத்துடன் அங்கு ராமபிரானுக்கு பிரமாண்ட கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கின. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது.
கட்டுமான பணிகள்
இந்த அறக்கட்டளையின் மேற்பார்வையில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான பூமி பூஜையை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி நடத்தினார்.அதைத்தொடர்ந்து தொடங்கிய கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் பலனாக கோவிலின் அடித்தளம் விரைவில் தயாராகி விடும் என விஸ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.
பூஜை, வழிபாடுகள் தொடங்கும்
இது குறித்து அந்த அமைப்பின் தேசிய செயலாளர் மிலிந்த் பாரண்டே நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக நடந்து வருகிறது. கோவிலின் அடித்தள கட்டுமான பணிகள் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரத்தில் முடிந்து விடும். 2023 டிசம்பர் மாதத்துக்குள் கோவிலின் கர்ப்பகிரகத்தில் பகவான் ராம்லல்லா அமர்வார். அத்துடன் பூஜை, வழிபாடுகளும், பக்தர்களின் தரிசனமும் தொடங்கி விடும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக ராமஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான அனில் மிஸ்ரா, வருகிற டிசம்பர் மாதத்தில் மிர்சாபூரின் இளஞ்சிவப்பு கற்களால் கோவிலின் அடித்தடி பீடம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.