ஆபாச வீடியோ விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி வருகிற 20-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர்

ஆபாச வீடியோ விவகாரத்தில் வருகிற 20-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி.
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி.
Published on

பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் வருகிற 20-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

ஆபாச வீடியோ விவகாரம்

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மாதம்(மார்ச்) 2-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்தா. இந்த வழக்கு குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம்பெண், பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி முன்பு 2 முறை ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

மேலும் சிறப்பு விசாரணை குழு போலீசாரும், இளம்பெண்ணிடம் தொடர்ந்து 6 நாட்கள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தனர். இந்த வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் போலீசார் 2 முறை விசாரணை நடத்தி இருந்தனர். ஆனால் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திய பின்பு ரமேஷ் ஜார்கிகோளியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தார்கள். இதற்காக விசாரணைக்கு ஆஜராகும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கு நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

ரமேஷ் ஜார்கிகோளிக்கு நோட்டீசு

ஆனால் ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி, கோகாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. தற்போது ரமேஷ் ஜார்கிகோளி கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். மேலும் வீட்டு தனிமையில் அவர் இருந்து வருகிறார். அதே நேரத்தில் தன்னிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ரமேஷ் ஜார்கிகோளியிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் போலீசார் மீது இளம்பெண் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இந்த நிலையில், ரமேஷ் ஜார்கிகோளி கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருப்பதால், வருகிற 20-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி சிறப்பு விசாரணை குழு போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர். அதாவது ரமேஷ் ஜார்கிகோளி வீட்டு தனிமையில் இருந்து வருவதால், அவரது சகோதரர் பாலசந்திர ஜார்கிகோளிக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருப்பதாக தெரிகிறது. ஆபாச வீடியோ விவகாரத்தில் கைதாக வாய்ப்புள்ளதால் வருகிற 20-ந் தேதி ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராவாரா? என்பது தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com