

பெங்களூரு: முன்னாள் மந்திரி ஆபாச வீடியோ விவகாரத்தில் நீதிபதியிடம் இளம்பெண் மீண்டும் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக போலீசாரிடம் கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆபாச வீடியோ வெளியானது
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரமேஷ் ஜார்கிகோளி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் குறித்து அரசின் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீது பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த இளம்பெண், கடந்த மாதம் 30-ந் தேதி பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அதன்பிறகு, இளம்பெண்ணிடம் சிறப்பு விசாரணை குழு போலீஸ் அதிகாரி கவிதா தலைமையிலான போலீசார் 6 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். இளம்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரமேஷ் ஜார்கிகோளிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு, அவர் தங்கி இருந்த தங்கும் விடுதிக்கும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
இளம்பெண் விசாரணைக்கு ஆஜர்
இளம்பெண் கொடுத்த தகவலின் பேரில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் போலீசார் விசாரணை நடத்த நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவர், கொரோனா பாதித்து குணமாகி தனிமையில் இருப்பதால் இன்னும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கூடிய விரைவில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த நிலையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் நேற்று திடீர் திருப்பமாக பெங்களூரு மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்திற்கு இளம்பெண் வருகை தந்திருந்தார்.
பின்னர் அவர், விசாரணை அதிகாரி கவிதா முன்னிலையில் ஆஜரானார். இளம்பெண்ணிடம், கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி போலீசார் தகவல்களை பெற்றனர். இந்த விசாரணையின் போது வழக்கு சம்பந்தப்பட்ட சில முக்கிய ஆதாரங்களை இளம்பெண், போலீசாரிடம் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுயமாக வாக்குமூலம்
ஆனால் 6 நாட்கள் தொடர் விசாரணை நடத்தப்பட்டு இருந்த நிலையில், நேற்று திடீரென்று இளம்பெண் போலீசார் முன்பு ஆஜராகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஆபாச வீடியோ விவகாரத்தில் நீதிபதியிடம் தான் அளித்த வாக்குமூலம் சுயமாக அளித்தது இல்லை என்றும், பிறர் வற்புறுத்தலால் கூறியது என்றும், அதனால் மீண்டும் நீதிபதியிடம் தான் சுயமாக வாக்குமூலம் அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் இளம்பெண் வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக ஏற்கனவே போலீசாரிடம் இளம்பெண் கூறி வந்த குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்கி இருப்பதாகவும் தெரிகிறது. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட நரேஷ்கவுடா, ஸ்ரவன் ஆகிய 2 பேரும், தன்னை ஹனிடிராப் விவகாரத்தில் பயன்படுத்தி கொண்டு இருப்பதாகவும் போலீசாரிடம் இளம்பெண் மாற்றி கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட விசாரணையில் நரேஷ்கவுடா, ஸ்ரவன் பற்றி எந்த ஒரு குற்றச்சாட்டுகளையும் போலீசாரிடம் இளம்பெண் கூறாமல் இருந்து வந்திருந்தார்.
பரபரப்பு
இந்த நிலையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண் திடீரென்று பல்டி அடித்து போலீசாரிடம் நரேஷ்கவுடா, ஸ்ரவன் குறித்து கூறி இருப்பதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின் போது இளம்பெண் கூறிய தகவல்களை தெரிவிக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் மறுத்து விட்டனர்.
முன்னதாக இளம்பெண் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி இருப்பது பற்றி அறிந்ததும், இளம்பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வக்கீல்கள் ஜெகதீஷ், சூர்ய முகுந்த்ராஜ் மடிவாளா தடயவியல் ஆய்வகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், இளம்பெண்ணை சந்தித்து இந்த விவகாரம் குறித்து தகவல்களை கேட்டு அறிந்து கொண்டனர்.