ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண், பெங்களூரு கோர்ட்டில் ஆஜரானார்

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரத்தில் அதிரடி திருப்பமாக நீதிபதியிடம் இளம்பெண் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண் கோர்ட்டுக்கு வந்தபோது எடுத்தபடம்.
ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண் கோர்ட்டுக்கு வந்தபோது எடுத்தபடம்.
Published on

பெங்களூரு: முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரத்தில் அதிரடி திருப்பமாக நீதிபதியிடம் இளம்பெண் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

ஆபாச வீடியோ வெளியானது

கர்நாடகத்தில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த 2-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ரமேஷ் ஜார்கிகோளி, இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகார்களின் பேரில் பதிவான வழக்கும் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது.

அதுபோல, இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ரமேஷ் ஜார்கிகோளி, இளம்பெண்ணின் பெற்றோர், சகோதரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். ஆனால் ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

கோர்ட்டில் மனு

விசாரணைக்கு ஆஜராகும்படி 6 முறை போலீசார் நோட்டீசு அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தனக்கு ரமேஷ் ஜார்கிகோளி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அத்துடன் சிறப்பு விசாரணை குழு ரமேஷ் ஜார்கிகோளிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக இளம்பெண் மறுத்து வந்தார். மாறாக நீதிபதி முன்னிலையில் நேரடியாக ஆஜராகி ஆபாச வீடியோ விவகாரம் குறித்து வாக்குமூலம் அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு இளம்பெண் இ-மெயில் மூலமாக கடிதம் அனுப்பினார்.

அதே நேரத்தில் இளம்பெண்ணின் வக்கீலான ஜெகதீஷ், பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி பாலகோபாலன் முன்னிலையில் இளம்பெண் விசாரணைக்கு ஆஜராக அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது 164 சட்டப்பிரிவின்படி நீதிபதியிடம் நேரடியாக இளம்பெண் வாக்குமூலம் அளிக்க அந்த மனுவில் வக்கீல் ஜெகதீஷ் தெரிவித்திருந்தா. அந்த மனுவை விசாரணைக்கு நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

வாக்குமூலத்திற்கு அனுமதி

இதையடுத்து, நேற்று முன்தினமே இளம்பெண் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம்பெண் எந்த தேதியில், எந்த நேரத்தில், எங்கு வைத்து ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவிக்காமல் இருந்தார். இதனால் நேற்று முன்தினம் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்கிடையில், வக்கீல் ஜெகதீஷ் தாக்கல் செய்த மனு மீது நேற்று நீதிபதி பாலகோபாலன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது நேற்று மாலை 6 மணிக்குள் தனது முன்னிலையில் இளம்பெண் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

அப்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு போலீசாரும் நீதிபதியிடம் அனுமதி கேட்டனர். இதையடுத்து, தன்னிடம் இளம்பெண் வாக்குமூலம் அளித்ததும், அவரிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதன் காரணமாக நிருபதுங்கா ரோட்டில் உள்ள பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டது.

விசாரணை அதிகாரி நியமனம்

இளம்பெண்ணை நீதிபதியிடம் அழைத்து செல்ல ஐ.பி.எஸ். அதிகாரி இஷா பண்ட் நியமிக்கப்பட்டு இருந்தார். அதுபோல, இளம்பெண்ணிடம் விசாரணை நடத்துவதற்காக உதவி போலீஸ் கமிஷனர் கவிதாவை, விசாரணை அதிகாரியாக நியமித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டு இருந்தார். நேற்று மதியம் 12.30 மணியளவில் இளம்பெண், பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதன் காரணமாக அங்கு வக்கீல்கள், போலீசார், பத்திரிகையாளர்கள், தொலைகாட்சி சேனல்களை சேர்ந்தவர்கள் திரண்டு இருந்தாகள். இளம்பெண்ணும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் இருப்பதாகவும், அவர் முழு பாதுகாப்புடன் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் கோர்ட்டுக்கு வருவதற்கு தயாராக இருப்பதாகவும் வக்கீல் ஜெகதீஷ் தெரிவித்தார். இதன் காரணமாக பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நேற்று காலையில் இருந்தே பரபரப்பாக காணப்பட்டது.

இளம்பெண் ஆஜர்

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று மதியம் 3.30 மணியளவில் பெங்களூரு வசந்த்நகர் குருநானக் பவனில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் இளம்பெண் விசாரணைக்கு ஆஜரானார். கொரோனா காரணமாக குருநானக் பவனில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே இளம்பெண் தனக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வந்திருந்தார்.

இதன் காரணமாகவும் கொரோனா காரணமாகவும் பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கேர்ட்டுக்கு பதிலாக அதிரடியாக குருநானக் பவனில் உள்ள சிறப்பு கோர்ட்டில் இளம்பெண் ஆஜராக நீதிபதி அனுமதி வழங்கி இருந்தார். அங்கும் போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டு இருந்தது. இளம்பெண்ணை சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி இருப்பது பற்றி போலீஸ் அதிகாரிகளுக்கே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு மணிநேரம் வாக்குமூலம்

இந்த நிலையில், சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பாலகோபாலன் முன்னிலையில் ஆஜரான இளம்பெண், ஆபாச வீடியோ விவகாரம் குறித்து வாக்குமூலம் அளித்தார். அந்த சந்தர்ப்பத்தில் நீதிபதி, இளம்பெண் மற்றும் இளம்பெண் கூறுவதை பதிவு செய்ய தட்டச்சர் ஆகிய 3 பேர் மட்டுமே இருந்தனர். வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் தனது வக்கீல் மூலமாக இளம்பெண் கொடுத்த 2 பக்கங்களை கொண்ட புகார் கடிதத்தில் இருந்ததை மட்டுமே நீதிபதியிடம் இளம்பெண் வாக்குமூலமாக கூறுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் நீதிபதியிடம் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். இதன் மூலமாக ஆபாச வீடியோ விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து நேற்று வரை நடந்த அனைத்து தகவல்களையும், ரமேஷ் ஜார்கிகோளி தனக்கு கொடுத்த பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் உள்ளிட்டவை குறித்து விளக்கமாக இளம்பெண் எடுத்து கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இளம்பெண் தனது வாக்குமூலத்தில் என்ன கூறினார்? என்பது தெரியவில்லை.

போலீசார் தீவிர விசாரணை

இளம்பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலம் அனைத்தும் வீடியோ மூலமாக பதிவு செய்யப்பட்டது. நீதிபதியிடம் இளம்பெண் வாக்குமூலம் அளித்ததும் சிறப்பு விசாரணை குழு போலீசாரிடம் இளம்பெண் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு பவுரிங் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வசந்த்நகரில் உள்ள குருநானக் பவனில் இருந்து மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இளம்பெண் அழைத்து செல்லப்பட்டா.

அங்கு வைத்து இளம்பெண்ணிடம் விசாரணை அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர் கவிதா மற்றும் பெண் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். ரமேஷ் ஜார்கிகோளி மீது கூறிய குற்றச்சாட்டு, கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகார், பெற்றோர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

பரபரப்பு

ஆபாச வீடியோ விவகாரத்தில் கடந்த 2-ந் தேதியில் இருந்து இளம்பெண் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்திருப்பது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண் அளிக்கும் தகவல்கள் மூலம் சிறப்பு விசாரணை குழு போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க உள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படுவாரா? என்பது இளம்பெண் அளிக்கும் தகவல்களை பொருத்து அமையும் என்று பேலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் வந்திறங்கிய இளம்பெண்

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரத்தில் கடந்த 2-ந் தேதியில் இருந்து இளம்பெண் தலைமறைவாக இருந்தார். நேற்று மதியம் நீதிபதி முன்பு ஆஜராகி இளம்பெண் வாக்குமூலம் அளித்தார். தலைமறைவாக இருந்த இளம்பெண், பெங்களூரு அருகே பதுங்கி இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தான் இளம்பெண், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது தெரியவந்துள்ளது. ஆனால் அவா எங்கிருந்து விமானத்தில் வந்தார்? என்பது தெரியவில்லை. விமான நிலையத்தில் இளம்பெண் பைகளுடன் வரும் வீடியோ காட்சிகள் நேற்று வெளியானது. நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்த இளம்பெண், துமகூரு ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது.

இளம்பெண் கூறிய வாக்குமூலம் என்ன?

ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளம்பெண் நேற்று நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது இளம்பெண்ணின் வக்கீலோ, போலீஸ் அதிகாரிகளுக்கோ, ரமேஷ் ஜார்கிகோளியின் வக்கீலுக்கோ அனுமதி வழங்கவில்லை. நீதிபதி, தட்டச்சர், இளம்பெண் மட்டுமே இருந்தனர். இதற்கு முன்பு இளம்பெண்ணின் காதலன் ஆகாஷ் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தபோது போலீசார் உடன் இருந்தார்கள். இதனால் அவர் அளித்த வாக்குமூலம் வெளியே கசிந்தது. தற்போது நீதிபதியிடம் இளம்பெண் அளித்திருக்கும் வாக்குமூலம், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணை கோர்ட்டுக்கு வரும்போது தான் தெரியவரும் என வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இளம்பெண்ணின் வாக்குமூலம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், இந்த வழக்கு குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு தேவைப்பட்டால், கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, இளம்பெண் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் இருப்பது பற்றி அறிந்து கொள்ளலாம் என்றும், அதற்கும் காலஅவகாசமாகும் என்றும் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், இளம்பெண்ணின் பெற்றோர் ரமேஷ் ஜாகிகோளிக்கு ஆதரவாகவும், டி.கே.சிவக்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு கூறி இருந்தாலும், இளம்பெண் ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராகவே வாக்குமூலம் அளித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com