நாராயண் ரானே கருத்தால் மத்திய அரசுக்கு அவமானம்; சிவசேனா

பிரதமருக்கு எதிராக யாரேனும் இப்படி பேசியிருந்தால் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் என சிவசேனா கூறியுள்ளது.
நாராயண் ரானே கருத்தால் மத்திய அரசுக்கு அவமானம்; சிவசேனா
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி. நாராயண் ரானே. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரி சபையை விரிவாக்கம் செய்தபோது அவர் மத்திய சிறு, நடுத்தர தொழில்கள் துறை மந்திரியாக பதவி ஏற்றார். மராட்டிய மாநிலம் ராய்காட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நாராயண் ரானே, உத்தவ் தாக்கரேவை கடுமையாக சாடியிருந்தார்.

இதுபற்றி அவர் பேசுகையில், முதல்-மந்திரிக்கு நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு கூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. சுதந்திர தின உரையின் போது ஆண்டை கணக்கிட்டு கூறுமாறு பின்னால் திரும்பி உதவியாளரிடம் கேட்கிறார். நான் அங்கு இருந்து இருந்தால், அவரை ஓங்கி அறைந்து இருப்பேன் என்றார். நாராயண் ரானேவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாராயண் ரானேவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று அவர் கைதும் செய்யப்பட்டார். பின்னர் இரவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மத்திய மந்திரி ஒருவர் கைது ஆனது நேற்று நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவசேனா விமர்சனம்

இந்த நிலையில், நாராயண் ரானே கருத்து மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்னாவின் தலையங்கத்தில் இது பற்றி கூறியிருப்பதாவது:- மத்திய மந்திரி பொறுப்பு கிடைத்தாலும் கூட ரானே, சாலையோர ரவுடி போன்றே நடந்துகொள்கிறார். மத்திய அரசை வெட்கி தலைகுனிய ரானே வைத்துவிட்டார். பிரதமருக்கு எதிராக யாரேனும் இப்படி பேசியிருந்தால் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கும். ரானேவின் கருத்தும் இதற்கு நிகரானதே. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ரானேவின் கருத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com