

புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆளும் அரசுக்கு வருகிற ஜூன் 15-ந்தேதி வரை ஆயுள் காலம் உள்ளது. இந்தநிலையில் புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 9-ந்தேதி நடந்தது.
புதுச்சேரி-23, காரைக்கால்-5, மாகி-1, ஏனாம்-1 என மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைப்பதற்கான 16 சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-16, பா.ஜனதா-10, அ.தி.மு.க.-2, எல்.ஜே.கே.-2 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
மற்றொரு அணியாக இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்-16, தி.மு.க.-13, வி.சி.க.-1 என கூட்டணி அமைத்து நின்றன. த.வெ.க.-28 தொகுதிகளில் தனித்தும், அதன் கூட்டணியாக நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி 28 தொகுதியிலும் போட்டியிட்டது. தேர்தலில் 117 சுயேச்சைகள் உள்பட 294 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
புதுவையில் 1,099 வாக்குச்சாவடிகளில் 1,099 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. புதுவை மாநிலத்தில் 8 லட்சத்து 67 ஆயிரத்து 267 பேர் வாக்களித்தனர். அதன் அடிப்படையில் மொத்தம் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள 3 வாக்குப்பதிவு எண்ணும் மையங்களிலும், காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொண்டு வைக்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த 6 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி தேர்தல்துறை அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வாக்கு எண்ணும் பணியில் 859 பேர் ஈடுபட்டனர். முதலில் 17 தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிவில் மண்ணாடிப்பட்டு-அமைச்சர் நமச்சிவாயம் (பா.ஜனதா), திருபுவனை (தனி)- சாய்.சரவணன்குமார் (த.வெ.க.), ஊசுடு (தனி)-காத்திகேயன் (காங்), மங்கலம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி (என்.ஆர்.காங்கிரஸ்), வில்லியனூர்-ரவிக்குமார் (என்.ஆர்.காங்), கதிர்காமம்-அழகானந்தம் (சுயே), தட்டாஞ்சாவடி-முதல்-அமைச்சர் ரங்கசாமி (என்.ஆர்.காங்), காமராஜ் நகர்- ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (எல்.ஜே.கே.), லாஸ்பேட்டை-சிவக்கொழுந்து (என்.ஆர்.காங்), காலாப் பட்டு-செந்தில் (தி.மு.க.), முத்தியால்பேட்டை-வையாபுரிமணிகண்டன் (என்.ஆர்.காங்), ராஜ்பவன் - விக்னேஷ் கண்ணன் (தி.மு.க.), உப்பளம்-அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், உருளையன்பேட்டை-நேரு எம்.எல்.ஏ. (நே.ம.க.), நெல்லித்தோப்பு-கார்த்திகேயன் (தி.மு.க.), முதலியார்பேட்டை-அமைச்சர் ஜான்குமார் (பா.ஜனதா), அரியாங்குப்பம்-அய்யப்பன் (என்.ஆர்.காங்), மணவெளி-ராமு (த.வெ.க.), ஏம்பலம்-மோகன்தாஸ் (என்.ஆர்.காங்), நெட்டப்பாக்கம்- துணை சபாநாயகர் ராஜவேலு (என்.ஆர்.காங்), பாகூர்-செந்தில்குமார் எம்.எல்.ஏ. (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு-டாக்டர்விக்னேஷ்வரன் (சுயே), திருநள்ளாறு-ஜி.என்.எஸ்.ராஜசேகரன் (பா.ஜனதா), காரைக்கால் வடக்கு-அமைச்சர் திருமுருகன் (என்.ஆர்.காங்), காரைக்கால் தெற்கு-நாஜிம் எம்.எல்.ஏ. (தி.மு.க.), நிரவி- திருப்பட்டினம்-மீனாட்சி சுந்தரம் (பா.ஜனதா), மாகி-அசோக்குமார் (சுயே), ஏனாம்-மல்லாடி கிருஷ்ணாராவ் (என்.ஆர்.காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
30 தொகுதிகள் கொண்ட புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-12 தொகுதிகளிலும், பா.ஜனதா-4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., எல்.ஜே.கே. தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 18 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இந்தியா கூட்டணியில் தி.மு.க.-5 தொகுதிகளிலும், காங்கிரஸ்-1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர தமிழக வெற்றிக்கழகம்-2 தொகுதிகளிலும், த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நேயம் மக்கள் கழகம்-1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள்- 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது 2 முறை ஆட்சி கட்டிலில் இருந்துள்ளார். அதன் பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய பின்னர், தற்போது 3-வது முறையாக அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆக 5-வது முறையாக முதல்-அமைச்சர் ஆசனத்தில் அவர் அமர உள்ளார்.
அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் முன்பு தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று வழிபட்டு, அதன் பின்னர் நல்லநாள் பார்ப்பது வழக்கம். அதன்படி, கோவிலில் சென்று வழிபட்ட பின்னர் விரைவில் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்க உள்ளார்.