அயோத்தி வழக்கை ஒரு தெய்வ சக்தி தான் முடிவுக்கு கொண்டு வந்தது - ரஞ்சன் கோகாய்

சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தன்னுடைய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அயோத்தி வழக்கை ஒரு தெய்வ சக்தி தான் முடிவுக்கு கொண்டு வந்தது - ரஞ்சன் கோகாய்
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், மத்திய அரசால் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவருமான ரஞ்சன் கோகாய் தனது சுயசரிதை புத்தகமான நீதிபதிக்கான நீதி: ஒரு சுயசரிதை(ஜஸ்டிஸ் பார் தி ஜட்ஜ்: ஆட்டோபயோகிரபி) வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

புதுடெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், தான் சந்தித்த பலவிதமான பிரச்சினைகள் மற்றும் அவற்றை எல்லாம் எதிர்கொண்ட விதம் குறித்த பல தகவல்களை ரஞ்சன் கோகாய் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டின முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையின் கீழ், சர்ச்சைக்குரிய நீண்டகால வழக்கான அயோத்தி ராமர் கோவில் வழக்கில் தீர்ப்பு வழங்கட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் போதும் வழக்கின் தீர்ப்பினை எழுதும் போது தான் அனுபவித்த உணர்ச்சிகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார். என்னுடைய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான வரிகள், சரியானவை எல்லாம் சொல்லப்படவில்லை, சொல்லப்பட்டவை எல்லாம் சரியானவை அல்ல என்பது ஆகும் என அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கின் விசாரணை, 2019ம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்டது.40 நாட்கள் தொடர் வாதங்கள் நடைபெற்று, அதன்பின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று, வழக்கின் அமர்வில் இருந்த நீதிபதிகள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைத்து சென்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய நீண்டகால வழக்கான அயோத்தி ராமர் கோவில் வழக்கில் ஒரு தெய்வ சக்தி தான் முடிவுக்கு கொண்டு வந்தது என்று ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு ஊழியர் ஒருவர் இவருக்கு எதிராக பாலியல் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கினை சிறப்பு அமர்வு ஒன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த சிறப்பு அமர்வில் ரஞ்சன் கோகாயும் ஒரு நீதிபதியாக இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் அந்த பெண் ஊழியரின் தரப்பு வாதம் தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த வழக்கு விசாரணையின் நீதிபதிகளில் ஒருவராக தான் இருந்திருக்க கூடாது என்று அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்து அவர் கூறுகையில், பின்னோக்கிப் பார்த்தால், நான் அந்த அமர்வில் நீதிபதியாக இருந்திருக்கக் கூடாது. நான் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், நாம் அனைவரும் தவறு செய்கிறோம். அதை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

நான் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் அந்த பெண் அளித்த கடித்ததை ஏற்று இரக்கப்பட்டு மீண்டும் அவருக்கு பணி வழங்கப்பட்டது என்பதையும் அவர் தெரிவித்தார்.

நாகாலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் தெரிவித்தார். மேலும், அந்த சம்பவம் மிகப்பெரிய தவறு என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com