

புதுடெல்லி,
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் டூல்களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சினை பெருமளவு சரிசெய்யப்பட்டு வருகிறது. ஆனால் கம்ப்யூட்டர் வைரசுக்கு எதிராக இன்னும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து கூறிஉள்ளது.
இந்நிலையில் ரான்சம்வேர் வைரஸ் இந்திய நெட்வோர்க்கை தாக்கியதாக தகவல்கள் எதுவும் இதுவரையில் வரவில்லை என அரசின் சைபர் க்ரைம் பாதுகாப்பு பிரிவு கூறிஉள்ளது.
இதுவரையில் அனைத்தும் நன்றாக செல்வதாகவே தெரிகிறது. ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் தொடர்பாக எந்தஒரு தகவல்களும் கிடையாது. நாங்கள் மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவங்களுடன் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கும் இந்தியாவில் இருந்து எந்தஒரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை. என இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு குழு (சிஇஆர்டி-இன்) இயக்குனர் சஞ்சய் பாகல் கூறிஉள்ளார். சனிக்கிழமை இவ்விவகாரம் தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுரையானது வழங்கப்பட்டு உள்ளது எனவும் சிஇஆர்டி-இன் கூறிஉள்ளது.
இதுவரையில் எந்தஒரு தகவலும் எங்களுக்கு வரவில்லை, பொதுவாக பிரச்சனை என்றால் வங்கிகள் ஆர்பிஐ அல்லது எங்களிடம் புகார் தெரிவிப்பார்கள், என பாகல் கூறிஉள்ளார்.