

புவனேஷ்வர்,
ஒடிசாவில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக புலிகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் புலிகள் எத்தனை உள்ளன என்று கணக்கிடும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணியில் ஒடிசா வனத்துறையை சேர்ந்த 700 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஒடிசாவில் அரிய வகை கருஞ்சிறுத்தை தென்பட்டுள்ளது.
இது குறித்து, வனபாதுகாப்பு முதன்மை அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்புக்காக வைக்கப்பட்டு இருந்த கேமராவில் கருஞ்சிறுத்தை படம் பிடிக்கப்பட்டுள்ளது. புலிகள் கணக்கெடுப்பு மூலம் எதிர்பாராத மற்றும் அற்புதமான விலங்குகள் தென்படுகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது எக்ஸ் தளத்தில் கருஞ்சிறுத்தையின் படத்தையும் பகிர்ந்துள்ளார். முன்னதாக, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் கரும்புலி( pseudo-melanistic) என்று செல்லப்படும் அரிய வகை புலி தென்பட்டது. ஒடிசா வனப்பகுதியில் அரியவகை கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது வன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.