அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கப் பணிகளை மாநில அரசு அனுமதிக்காது - கேரள மந்திரி திட்டவட்டம்

அரிய வகை கனிம மணல் சுரங்கங்கள் பொதுத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என பி.கே.குன்ஹாலிகுட்டி தெரிவித்துள்ளார்.
அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கப் பணிகளை மாநில அரசு அனுமதிக்காது - கேரள மந்திரி திட்டவட்டம்
Published on

திருவனந்தபுரம்,

கனிம மணல் சுரங்கங்களை தனியார்மயமாக்கவோ அல்லது அரிய வகை கனிமங்களை புதிதாக தோண்டி எடுக்கவோ மாநில அரசு அனுமதிக்காது என்று கேரள தொழில்துறை மந்திரி பி.கே.குன்ஹாலிகுட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“அரிய வகை கனிம மணல் சுரங்கங்களை தனியார்மயமாக்க முடியாது. அது பொதுத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அது தொடரும். அதில் எந்தக் கேள்வியும் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய திட்டங்கள் மட்டுமே மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. புதிய சுரங்க நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவில்லை.

தனியார்மயமாக்கல் அல்லது புதிய சுரங்கம் தோண்டுவதற்கான ஏதேனும் சாத்தியக்கூறு எழுந்தால், ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அதை அனுமதிக்காது. நாங்கள் அந்த முன்மொழிவுகளை விரிவாக ஆராய்ந்து எங்கள் கொள்கையை அறிவிப்போம். ஆனால் நான் ஒன்றை மிகத் தெளிவாகக் கூறிவிடுகிறேன், புதிய சுரங்கப் பணிகளோ அல்லது தனியார்மயமாக்கலோ நடைபெறாது.

2011-ல் உம்மன் சாண்டி தலைமையிலான UDF அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து, கனிம சுரங்கங்கள் தனியார்மயமாக்கலையோ அல்லது புதிய சுரங்கப் பணிகளையோ அனுமதிக்கவில்லை. அதே கொள்கை தற்போதும் தொடரும்.

முன்மொழியப்பட்ட கனிம வழித்தடம் குறித்து எந்தவொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அந்த முன்மொழிவின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்பட்டது.

நான் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். தனியார்மயமாக்கல் நடக்காது, புதிய சுரங்கப் பணிகளும் நடைபெறாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com