அனகாப்பள்ளியில் அபூர்வமான விநாயகர் சிலை- 20 டன் வெல்லத்தால் ஆன சிறப்பு தோற்றம்
இந்த முறை முழுமையாக வெல்லக் கட்டிகளால் உருவாக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.
திருப்பதி,
விசாகபட்டினம் மாவட்டம் அனகாப்பள்ளி நகரில், இந்தாண்டு விநாயக சதுர்த்தி விழாவையொட்டி விசேஷமான விநாயகர் சிலை நிறுவப்பட்டது. சுமார் 20 டன் (20,000 கிலோ) வெல்லக் கட்டிகளை பயன்படுத்தி சிலையை வடிவமைத்துள்ளனர்.
பொதுவாக விநாயகர் சிலைகள் மண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் அல்லது உலோகங்களால் செய்யப்படுகின்றன. ஆனால் இந்த முறை முழுமையாக வெல்லக் கட்டிகளால் உருவாக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த “வெல்ல விநாயகர்” சிலை ஏற்கனவே மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
விநாயக சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அனகாப்பள்ளி மக்கள் எடுத்த இந்த புதுமையான யோசனை, பக்தர்களுக்கு ஆன்மிக ஆனந்தத்தை அளிக்கிறது. பண்டிகை நாட்களில் இந்த சிலையை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த வெல்ல விநாயகரை கண்டு வருகின்றனர்.








